தவிசாளர் நிரோஸின் கடமைக்கு இடையூறு; சந்தேக நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸின் கடமைக்கு இடையூறு விளைவித்த வழக்கில் சந்தேக நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கட்டப்பிராயில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அனுமதியற்ற சட்டவிரோத கட்டிடம் ஒன்றை இடித்து அழிக்கும் செயற்பாட்டில் கடமையில் ஈடுபட்டிருந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸை வேறு பிரதேசத்தில் இருந்து அவ்விடத்துககு வருகை தந்த ஒருவர் தான்  அழைத்து வந்த சகாவிடம்  தொலைபேசியை வழங்கி தான் தவிசாளருடன் பாதை பிரச்சினை ஒன்று தொடர்பாக முரண்படவுள்ளமையை  வீடியோ பதிவு செய்யுமாறு தெரிவித்துவிட்டு தவிசாளரை நோக்கி அவதூறுப்படுத்தியதுடன் கடமைக்கு இடையூறுப்படுத்தினார்.

இதன்போது,  தவிசாளர் தங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் தம்மை அலுவலகத்தில் முறைப்படி அணுகுமாறு தெரிவித்தவிட்டு கடமையில் நின்றார்.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் தவிசாளரை மரியாதைக்குறைவாக எச்சரித்திருந்ததுடன் கடமைக்கு இடையூறகாக செயற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து தனது கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அந்நபருக்கு எதிராக தவிசாளர் வாக்குமூலமளித்திருந்தார்.

இந்நிலையில் தவிசாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமைக்காகக் கைது செய்யப்பட்டவரை நேற்று(03) மேலதிக நீதவான் நீதிமன்றில் கோப்பாய் பொலிஸார் முற்படுத்தியதுடன் பி அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் எதிராளிக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதிமன்று எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியல் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *