விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில், கத்தோலிக்க சபையுடனான விசேட கலந்துரையாடல் நேற்று முன்தினம் (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சுமார் 09 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்க பாடசாலைகளின் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், கத்தோலிக்க மதக் கல்விக்கான ஆசிரியர் பணிக்குழாம் முறையொன்றை உருவாக்குதல், ஆசிரியர் சேவைக்காக கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்தந்தைமாரை இணைத்துக்கொள்வதன் அவசியம், அத்துடன் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்க பாடசாலைகளின் நடவடிக்கைகளுக்காக கல்வி அமைச்சின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை அமைத்தல் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
கத்தோலிக்க சபையுடன் ஆண்டுக்கு மூன்று முறை கலந்துரையாடல்களை நடத்துவதற்கும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே அதற்கான செயலாளராகச் செயற்படுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தமைக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்குத் தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, எந்தவொரு பாகுபாடுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் தத்தமது மதத்தைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன், கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அருட்தந்தை ஹெரல்ட் அட்டனி பெரேரா, அருட்தந்தை கிறிஸ்டி நோயல் இம்மானுவேல், அருட்தந்தை அன்டன் ரஞ்சித், அருட்தந்தை விமல் சிறி ஜயசூரிய உள்ளிட்ட கத்தோலிக்க சபை பிரதிநிதிகள் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

