நாட்டைச் சூழவுள்ள ஆழ்கடல் மற்றும் கரையோரக் கடற்பரப்புகளில் நிலவி வரும் தீவிரக் கொந்தளிப்பான வானிலையினால், வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று(08) வெளியிடப்பட்டுள்ள இந்த விசேட அனர்த்த ஆலோசனையானது, நாளைய (09) முற்பகல் 10.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாகக் கற்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். இப்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வீசக்கூடும்.
இதனால், கடலில் பயணம் செய்வோரும் மற்றும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரும் வரை மேற்படி கடற்பரப்புகளில் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்ந்துகொள்ளுமாறு மிக அவசரமாகக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாகக் காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளும், கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். இப்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

