கிழக்கில் புதிய ஏற்றுமதியாளர்களை வலுப்படுத்தும் விழிப்புணர்வு செயலமர்வு

கிழக்கு மாகாணத்தில் புதிய ஏற்றுமதியாளர்களை அடையாளம் கண்டு அவர்களை சர்வதேச சந்தைக்கு வழிநடத்தும் நோக்கில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு செயலமர்வு மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் நடைபெற்றது.

 

இந்நிகழ்விற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிமங்கள விஜேசிங்க தலைமையேற்றதுடன், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் கலந்து கொண்டு கொண்டார்.

 

நாடளாவிய ரீதியில் புதிய ஏற்றுமதியாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஏற்றுமதித் துறையில் முன்னேற்றுவதற்காக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நடைபெறும் ஏழாவது விழிப்புணர்வு நிகழ்வாக இச்செயலமர்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை அடையாளம் கண்டு, அவர்களை எதிர்கால ஏற்றுமதியாளர்களாக உருவாக்கும் நோக்கில் ஐரோப்பிய யூனியன், குளோபல்கேற்வே மற்றும் சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் அனுசரணையுடன் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

 

இரண்டு நாட்கள் நடைபெறும் இச்செயலமர்வில் ஏற்றுமதி தயார்நிலை, சர்வதேச சந்தை வாய்ப்புகள், ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் தொழில்முனைவோர் திறன் மேம்பாடு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

 

கிழக்கு மாகாண தொழில்முனைவோரின் ஏற்றுமதித் திறனை மேம்படுத்துவதோடு, புதிய சர்வதேச சந்தை வாய்ப்புகளை உருவாக்கி, பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்வதில் இந்நிகழ்வு முக்கிய பங்காற்றும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

 

இந்நிகழ்வில் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய அபிவிருத்திக்கான பணிப்பாளர் டி.எம்.பி. தியாசாநாயக்க, சர்வதேச நிதி கூட்டுத் தாபனத்தின் பிரதி நிதிகள், பிரதி பணிப்பாளர் பி.எம்.எம். சமிம், உதவி பணிப்பாளர், துறைசார் நிபுணர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

இதன் போது உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள் பலர் கலந்து பயன் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *