டெங்கு பரவல்; சட்ட நடவடிக்கையே நிரந்தர தீர்வு – மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டு வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் எனவும் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில், டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்ட பகுதிகளில் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய செயல் திட்டங்கள் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

 

இருப்பினும், டெங்கு பரவலை முழுமையாக கட்டுப்படுத்த சட்ட நடவடிக்கைகளே நிரந்தர தீர்வாக அமையும் என சுட்டிக்காட்டிய அவர், தண்டனைகள் வழங்கப்படாத நிலையில் குற்றங்களைத் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

 

மேலும், சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்ட வீடுகளுக்கு இனி நேரடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் மாமாங்கம், கல்லடி, நாவற்குடா மற்றும் கொக்குவில் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், அப்பகுதிகளில் டெங்கு நோயாளிகள் தொடர்ந்து இனங்காணப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

 

அதேவேளை, பாடசாலைகளில் சுகாதாரக் குழுக்களின் ஊடாக டெங்கு பரவலைத் தடுக்கும் செயல் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும், சில பாடசாலைகள் வழங்கப்பட்டுள்ள சுகாதார அறிவுரைகளை பின்பற்றாமல் செயற்படுவது கவலைக்குரிய விடயமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

டெங்கு ஒழிப்பில் அதிகாரிகளின் நடவடிக்கைகள் மட்டுமே போதுமானதாக இருக்காது என்றும், பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நோய் பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இளையதம்பி உதயகுமார் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *