மட்டக்களப்பு மகா ஜன கல்லூரி மாணவிகளுக்கு வீதிப் போக்குவரத்து சமிக்ஞைகள் மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி நெறி பாடசாலை அதிபர் எஸ். சாந்தகுமார் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக நடைபெற்றது.
மாணவிகள் வீதிகளில் பாதுகாப்பாகப் பயணிப்பதுடன், போக்குவரத்து ஒழுங்குகளை முறையாகக் கடைப்பிடித்து, வீதிப் போக்குவரத்து சமிக்ஞைகளை உரிய முறையில் பயன்படுத்துவதற்கான நடைமுறைப் பயிற்சிகள் இதன்போது வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஐ.எம்.ஜி. திசாநாயக்க அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இப்பயிற்சியில், வீதி விபத்துகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வாகன சாரதிகளுக்கு சமிக்ஞைகளை வழங்கும் முறை மற்றும் வீதியில் கடமையாற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பிலும் மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது, வீதிப் போக்குவரத்து சமிக்ஞை பணியில் ஈடுபடும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரால் பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வீதிப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், எதிர்காலத்தில் பொறுப்புடன் வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளைப் பின்பற்றுவதற்கான பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், போக்குவரத்துப் பொலிஸார் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

