காத்தான்குடியில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான சுருக்கு வலைகளுடன் இருவர் கைது!

காத்தான்குடி பாலமுனை பகுதியில் வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்ற 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சட்டவிரோத சுருக்கு வலைகளுடன் 2 பேரை நேற்று வியாழக்கிழமை (05) அதிகாலையில் கைது செய்து காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

மட்டு ஊழல் மோசடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பினர் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு வழங்கிய தகவலையடுத்து மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் வழிகாட்டலில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவ தினமான நேற்று அதிகாலை 4.00 மணிக்கு பாலமுனை  கடற்கரைக்கு செல்லும் பகுதி வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இதன் போது கடற்கரையை நோக்கி பிரயாணித்த மூடிய சிறிய ரக வாகனம் ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் நிறுத்தி சோதனையிட்ட போது அதில் சட்டவிரோத சுருக்கு வலைகளை கொண்டு செல்வதை கண்டுபிடித்ததை அடுத்து அந்த வாகனத்தின் சாரதி உட்பட இருவரை கைது செய்ததுடன் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சுருக்கு வலைகளையும்  மூடிய சிறிய ரக வாகனத்தையும் மீட்டு காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத சுருக்கு வலை பாவித்து மீன் பிடியில் ஈடுபடுவதை கண்டித்து கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் முன்னாள் மீனவ சங்கங்கள் மீனவர்கள் ஒன்றினைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அந்த திணைக்கள பணிப்பாளரிடம் மகஜர் கையளித்த போதும் அந்த திணைக்கள அதிகாரிகள்  இந்த சட்டவிரோத சுருக்கு வலை பாவித்து மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பாக எது விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அசமந்தப் போக்கில் செயற்படுவதாக மீனவர்கள் கடும் விசனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *