அபூபக்கர் இஸ்ஸதீனுக்கு நாட்டாரியல் வித்தகர் விருது !

கிழக்கு மாகாண பண்பாட்டு அமைச்சினால் வழங்கப்படும் நாட்டாரியலுக்கான வித்தகர் விருது – 2026, சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட அண்ணாவியார் கலாபூஷணம் அபூபக்கர் இஸ்ஸதீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர உள்ளிட்ட அதிதிகளிடமிருந்து அவர் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.

பாரம்பரியக் கலையான கோலாட்டம் எனப்படும் பொல்லடிக் கலையை முறையாகப் பயின்று, இளம் தலைமுறையினருக்கும் பயிற்றுவித்து வரும் இவர், சிறுவயது முதல் இக்கலையின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றார்.

குடும்பப் பொறுப்புகளுக்கு மத்தியிலும் தனது கலைத்திறனைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்ட இவர், தனது ஆறு பிள்ளைகளில் மூவரைப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளாக உருவாக்கியுள்ளதுடன், குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் கலைத்துறையின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

தனது கல்விக் கனவுகளைத் தியாகம் செய்து பிள்ளைகளின் எதிர்காலத்தை உருவாக்கியதுடன், ஓய்வு நேரத்தையும் பாரம்பரியக் கலைக்காக அர்ப்பணித்த அவரது வாழ்வியல் பயணத்திற்கு இந்த விருது கிடைத்துள்ள முக்கியமான அரச அங்கீகாரமாக அமைந்துள்ளது.

சிரேஷ்ட அண்ணாவியார் அபூபக்கர் இஸ்ஸதீனின் இச்சாதனைக்குக் கலைத்துறையினரும் சமூகத்தினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *