கிழக்கில் சுருக்கு வலையால் மீன்வளம் அழிவு – ராஜ்குமார் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடகப் பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மட்டக்களப்பு பாலமீன்மடுவில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கடற்பரப்பில் தொடர்ச்சியாக சட்டவிரோத சுருக்கு வலைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்திடம் பலமுறை முறைப்பாடுகள் செய்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தமது அமைப்பு கடற்படை மற்றும் பொலிஸாரின் உதவியுடன் 14 சுருக்கு வலைகளை அடையாளம் கண்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் சிலர் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை எனவும், இவ்விடயத்தில் அதிகாரிகள் சிலருக்கு இலஞ்சம் வழங்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், பூநொச்சிமுனை தொடக்கம் களுவாஞ்சிக்குடி வரையான கடற்பகுதியில் சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடியில் ஈடுபடுவதாகச் சிலர் தொடர்பிலும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

எனவே, குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீன்பிடி அமைச்சர் இவ்விடயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *