மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான நான்காம் காலாண்டு மாவட்ட வலையமைப்புக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் இன்று (13) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், உதவி மாவட்டச் செயலாளர் ஜி. பிரணவன் அவர்களின் மேற்பார்வையில், மாவட்ட மகளிர் அபிவிருத்தி இணைப்பாளர் எஸ். அருணாளினியின் ஏற்பாட்டில் இக்கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது குடும்ப வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகம், இளம்பருவக் கர்ப்பம், தற்கொலை முயற்சிகள் மற்றும் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, பிரதேச செயலகப் பிரிவுகளில் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்குத் துரித தீர்வுகளை வழங்குதல், சிறுவர் இல்லங்களின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பாதுகாப்பு, ஆலோசனை மற்றும் பராமரிப்புச் சேவைகளை வலுப்படுத்துதல் தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், பாடசாலை இடைவிலகலைத் தடுத்தல், நீண்டகாலப் பராமரிப்பை வழங்கக்கூடிய பெண்கள் பாதுகாப்பு இல்லமொன்றை அமைப்பதன் அவசியம் மற்றும் பெண்கள், சிறுவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் நிலவும் நடைமுறைச் சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான பல்துறை சார்ந்த தேசிய செயற்திட்டம் தொடர்பான தெளிவூட்டலை சமூக அபிவிருத்தி நிபுணர் ஏ. சுவர்ணலிங்கம் வழங்கினார்.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை மாவட்ட அரசாங்க அதிபர் வலியுறுத்தியதுடன், நடைமுறைச் சவால்களைக் கையாள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

