நுவரெலியாவில் சிதறிக் கிடக்கும் வெசாக் கூடுகளும், கழிவுகளும்; பொது மக்கள் விசனம்

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் மத்திய சந்தைக்கு எதிரில் அதிகமாக வெசாக் கூடுகளும் அதன் கழிவுகளும் சிதறி கிடப்பதாக பொது மக்கள் தெரிவித்தனர்.

நுவரெலியாவில் கடந்த(10) ஆம் திகதி முதல்(16) திகதி வரை தேசிய வொசாக் வாரமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏராளமான வெசாக் மின் தோரணங்கள் நிர்மாணிக்கப்பட்டதோடு மேலும் பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் வெசாக் கூடுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன.

எவ்வாறாயினும் (17) ஆம் திகதி முதல் ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு குழுவினரும் அவர்கள் அமைத்து காட்சிப்படுத்திய வெசாக் கூடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் அதே இடங்களில் அகற்றிய வெசாக் கூடுகளையும் அதற்கு பயன்படுத்திய கழிவுப் பொருட்களையும் வீசி சென்றுள்ளதாகவும், இதனால் வீதியோரத்தில் நடந்து செல்ல முடியாமல் உள்ளதாகவும் குறித்த வீதியினை பயன்படுத்துவோர் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் வெசாக் கூடுகள் மற்றும் தோரணங்கள் அமைத்து தற்காலிகமாக தங்கியிருந்து பாதுகாத்து வந்தவர்களும் தங்கியிருந்த இடங்களில் பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள், உணவுப் பொதி, பெட்டிகள் மற்றும் கடதாசிகள் போன்றவற்றை வீசிச் சென்றுள்ளனர். இதனால் இரவு நேரங்களில் உணவுக் கழிவுகளை தேடி நாய்கள் மற்றும் வனவிலங்குகள் வந்து செல்வதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் இது சுகாதாரப் பிரச்சனையாகி நோய்க் கிருமிகள் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதில் ஈக்களின் பெருக்கமும் அதிகரித்து சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வியாபாரிகளுக்கும் பொது மக்களுக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே நுவரெலியா மாநகரசபை அதிகாரிகள் குறித்த நிலைமையை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதில் குறிப்பாக வெசாக் கொண்டாடம் ஆரம்பித்த நாள் முதல் நுவரெலியாவிற்கு வருகைதந்த பக்தர்கள் பொலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் உட்பட ஏராளமான கழிவுகளை நகரில் விட்டுச் சென்றதால் துப்புரவுப் பணியாளர்களால் தொடர்ந்து பணியாற்றுவது கடினமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *