மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத் திட்டத்தினூடாக பாடசாலைகளில் நவீன முறையில் சமயலறைகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் உலக உணவுத்திட்ட ஒத்துழைப்புகான கூட்டாண்மை செயலகத்திற்கான பணிப்பாளர் நாயகம் ஆர்.ரூசாந்தனின் பங்கு பற்றுதலுடன் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று(11) இடம் பெற்றது.
உலக உணவுத் திட்ட நிறுவனம் அரசாங்கத்துடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கான போசாக்கான உணவு உட்கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான பல செயற்றிட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக ஐந்து கல்வி வலயங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான சமைத்த உணவுகளை வழங்குவதற்கான நவீன சமயலறைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இத் திட்டத்தினூடாக பாடசாலைகளின் சூரியத்தகடு பொருத்தப்படவுள்ளதுடன், உலக உணவுத் திட்டத்தினூடாக உணவு பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான வீட்டுத்தோட்டம் மற்றும் கோழி வளர்ப்பு திட்டம் என்பன ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந் நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநிதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான ரீ.நிர்மலராஜ், எஸ்.சசிகுமார், மாவட்ட பிரதம பொறியியலாளர் ரி.சுமன், இலங்கை மின்சார சபையின் பொறியியளாளர் ரஸ்ஸி, வலய கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பொறியியலாளர் சதிஸ்குமார், உலக உணவு திட்ட அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

