அரச மற்றும் தனியார் துறையினர் வாக்களிக்க செல்வதற்கு போதுமான விடுமுறை வழங்க வேண்டும். தனியார் துறையின் சேவையாளர்கள் வாக்களிக்க செல்வதற்கு தொழில் வழங்குநர்கள் கட்டாயம் போதுமான விடுமுறை வழங்க வேண்டும்.
இவ்விடயம் குறித்து தேர்தல்கள் ஆணைக்கு அவதானத்துடன் செயற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.
உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் இன்றும், நாளையும் தமது வதிவிட பிரதேசத்தில் உள்ள தபால் நிலையத்தை நாடி வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் அட்டையின்றியும் வாக்களிக்க முடியும். இருப்பினும் வாக்களிப்பு நிலையத்தில் ஏற்படும் அசெளகரியங்களை தவிர்த்துக் கொள்வதற்கு வாக்காளர் அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் வாக்களிக்க செல்லுங்கள் என்று வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இன்று(04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரச சேவையாளர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுவது அத்தியாவசியமானது.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ளன. தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கான நியமனப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் கடமை அத்தியாவசியமானது. ஆகவே பொறுப்பளிக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள் தமக்கான தேர்தல் பணிகளில் ஈடுபடுவது அத்தியாவசியமானது.