மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்குகளை எண்ணுவதற்காக 144 வட்டார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம். சுபியான் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 சபைகளுக்காக இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் இம்முறை 447 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதுடன் 144 வட்டாரங்களில் இருந்து மேலதிக பட்டியலுடன் சேர்ந்து 274 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. மாவட்டத்தில் தேர்தல் பணிகளுக்காக இம்முறை 6000 க்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதேவேளை 447 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறுகின்ற வாக்களிப்புகளை எண்ணுவதற்கு 144 வட்டார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மாவட்டத்தில் இம்முறை நான்கு இலட்சத்தி 55 ஆயிரத்து 520 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 50க்கு குறைவான தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்காக விசேட நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
தபால் மூல வாக்கெண்ணும் பணிகளுடன் இணைந்ததாக இறுதி தேர்தல் முடிவு வட்டார தேர்தல் எண்ணும் நிலையத்திலிருந்து வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.